

வேடசந்தூர்: வேடசந்தூரில் கஞ்சா விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர், போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது வேன் மோதி உயிரிழந்தார்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி(35), இவரது மனைவி கலையரசி(30). இருவரும் வேடசந்தூர் அருகே வி.எல்லைப்பட்டி கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்தனர்.
இதற்கிடையே, பொன்னுச்சாமி தேனி மாவட்டத்தில் இருந்து கஞ்சா வரவழைத்து வேடசந்தூர் பகுதி நூற்பாலைகளில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.
வீட்டில் சோதனை
போலீஸார் விசாரணையில் இத்தகவல் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பொன்னுச்சாமி வீட்டுக்கு கூம்பூர் போலீஸார் இருவர் நேற்று முன்தினம் இரவு சென்றனர். வீட்டில் இருந்த பொன்னுச்சாமியை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா கடம்பன்குறிச்சி கிராமத்துக்கும், எல்லைப்பட்டி கிராமத்துக்கும் இடையே சென்றபோது, போலீஸாரின் பிடியில் இருந்த பொன்னுச்சாமி தப்பி ஓடினார். அப்போது எதிரே வந்த வேன் மோதியதில் பொன்னுச்சாமி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
வேன் ஓட்டுநர் கைது
விபத்து நிகழ்ந்தது திண்டுக்கல்-கரூர் மாவட்ட எல்லை என்பதால் இவ்வழக்கு எந்த மாவட்டக் காவல்நிலைய எல்லைக்குள் வரும்என்பதில் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் வருவாய்த் துறையினர் உதவியுடன் எல்லை கண்டறியப்பட்டதால் அரவக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இறந்த பொன்னுச்சாமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வேன் ஓட்டுநர் விஜயகுமாரை போலீஸார் கைது செய்தனர்.