Published : 06 Jun 2022 08:20 AM
Last Updated : 06 Jun 2022 08:20 AM

வங்கியில் பல கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாக நகைக் கடை உரிமையாளரிடம் ரூ.1.18 கோடி மோசடி: மதுரையில் பெண் உட்பட 2 பேர் கைது

மதுரை: மதுரையில் நகைக் கடை உரிமையாளருக்கு பல கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.1.18 கோடி மோசடி செய்த பெண் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை காமராசர் சாலை நவரத்தினபுரத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். நகைக் கடை நடத்தி வருகிறார். இவரிடம் செல்லூரைச் சேர்ந்த மகாலட்சுமி(45), பழனிக்குமார்(37) ஆகியோர் வங்கியில் கோடிக்கணக்கில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளனர். அதற்கு சந்தோஷ்குமாரிடம் இருந்து முன்பணமாகப் பல்வேறு தவணைகளில் ரூ.1.18 கோடியை 2 பேரும் பெற்றுள்ளனர். ஆனால், வங்கிக் கடன் வாங்கித் தரவில்லை.

அதிகாரிகள் பெயரை கூறி..

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சந்தோஷ்குமார், மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரித்தனர்.

விசாரணையில், சந்தோஷ்குமாருக்கு தொழில் ரீதியாகப் பணம் தேவை என்பதை அறிந்த மகாலட்சுமியும், பழனிக்குமாரும், அவரிடம் தங்களுக்கு தெரிந்த சென்னை தலைமைச் செயலக அதிகாரிகள் மூலம் பெரிய அளவில் வங்கிக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து மகாலட்சுமி, பழனிக்குமாரை தெப்பக்குளம் போலீஸார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x