புதுக்கோட்டை கூட்டுறவு சங்கத்தில் நகை மோசடி: சங்க செயலாளர், நகை மதிப்பீட்டாளர் பணியிடை நீக்கம்
புதுக்கோட்டை: நல்லூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைக்கப்பட்ட தங்க நகையை எடுத்து தனியார் வங்கியில் அடகு வைத்த சங்கத்தின் செயலாளர், நகை மதிப்பீட்டாளர் ஆகிய 2 பேர் பணியிடை நீக்கம் செய்து புதுக்கோட்டை மண்டல கூட்டுறவு இணை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே நல்லூரில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் சேவையை நல்லூர், நெறிஞ்சிக்குடி, வாழைக்குறிச்சி, கூடலூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், சுய உதவிக்குழுவினர் உள்ளிட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு, 800-க்கும் அதிகமானோர் தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணன் என்பவர் கூட்டுறவு சங்கத்தில் தான் வைத்திருந்த நகையை திருப்ப சென்றிருக்கிறார். அவரது நகை சங்கத்தில் இல்லாததால், அதற்கு பதிலாக மாற்று நகையை சங்கம் கொடுத்துள்ளது. இந்த விவகாரத்தை வெளியில் யாரிடமும் கூறவேண்டாம் எனவும் கூட்டுறவு சங்கத்தினர் கூறியதாக தெரிகிறது.
இதற்கிடையில் கிருஷ்ணன், கூட்டுறவு சங்கத்தில் வைக்கப்பட்ட என்னுடைய சங்கிலி ஒன்று மாயமாகி விட்டதால் மற்றவர்கள் தங்களது நகைகளை கூட்டுறவு சங்கத்துக்கு சென்று சரிபார்த்துக்கொள்ளுங்கள்" என்று சமூக வலைதளத்தில் அண்மையில் பதிவிட்டுள்ளார். இந்தத் தகவலைத் தொடர்ந்து, மக்கள் கூட்டுறவு சங்கத்துக்கு சென்று தங்களின் நகைகளைச் சரிபார்க்க சென்றனர். இதுகுறித்து கூட்டுறவு சங்க அலுவலர்களுக்கும் புகார் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வங்கியின் வரவு, செலவு மற்றும் நகை அடகு விவரங்களை அலுவலர்கள் முழுமையாக ஆய்வு செய்தனர். அதில், சங்கத்தில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 159 கிராம் நகைகளை, தனது சொந்த தேவைக்காக நகை மதிப்பீட்டாளரான புதுக்கோட்டை வசந்தபுரி நகரைச் சேர்ந்த என்.சாமிநாதன், வேறொரு தனியார் வங்கியில் அடகு வைத்திருந்ததும், இதற்கு கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் காரையூரைச் சேர்ந்த சங்கிலியும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இது தொடர்பாக அறந்தாங்கி துணை பதிவாளர் முருகேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில், சங்கிலி, சாமிநாதன் ஆகியோர் மீது காரையூர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் சங்கிலி, சாமிநாதன் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து புதுக்கோட்டை மண்டல கூட்டுறவு இணை பதிவாளர் உமா மகேஸ்வரி இன்று (ஜூன்-5) உத்தரவிட்டார்.
சங்கிலி, சாமிநாதன் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் இருவரும் தலைமறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
