Published : 05 Jun 2022 06:48 AM
Last Updated : 05 Jun 2022 06:48 AM

போலி ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனம் நடத்திய கும்பல் கைது: 188 பவுன் நகைகள், ரூ.58 லட்சம் பறிமுதல்

வழக்குகளில் சிறப்பாக துப்பு துலக்கிய மத்திய குற்றப்பிரிவு போலீஸாரை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று பாராட்டி சான்றிதழ் வழங்கினார். உடன், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் தேன்மொழி, துணை ஆணையர்கள் நாகஜோதி, மீனா, சியாமளா தேவி.

சென்னை: பல்வேறு நாடுகளில் 40-க்கும் மேற்பட்ட போலி ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனம் நடத்திய கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த கும்பலிடம் இருந்து 188 பவுன் நகை, ரூ.58 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளில் 40-க்கும் மேற்பட்ட போலி ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் பண மோசடி செய்ததாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சகோதரர்கள் பொன்ராஜ், கெவிராஜ், டேனியல், புதுச்சேரியை சேர்ந்த பேட்ரிக்மாரி விஜயமுருகப்பா ஆகிய 4 பேரை மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி புலனாய்வு பிரிவு போலீஸார் கைது செய்தனர். கும்பலிடம் இருந்து 188 பவுன் நகைகள், ரூ.58 லட்சம் பணம், 2 கார்கள், கணினி, மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள், ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மத்திய, மாநில அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 100-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.5 கோடிக்கு மேல் பணம் வசூலித்து மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. போலி அரசு முத்திரையை பயன்படுத்தி, போலியாக பணி நியமன ஆணைகளை வழங்கியதும் தெரியவந்தது. இதுதொடர்பாக சென்னை நன்மங்கலத்தை சேர்ந்த ரேணுகா, அவரது கணவர் ரஞ்சித் உட்பட 11 பேரை மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு போலீஸார் சமீபத்தில் கைது செய்தனர்.

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவின் (ஏஐசிடிஇ) பெயரில் போலியாக நேர்காணல் நடத்தி அரசுப் பணி வாங்கித் தருவதாக கூறி ரூ.2.5 கோடி மோசடி செய்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு பல்வேறு வழக்குகளில் சிறப்பாக துப்பு துலக்கிய மத்திய குற்றப்பிரிவு போலீஸாரை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

அரசு வேலைவாய்ப்பு மோசடி விவகாரத்தில் அரசு அலுவலக உதவியாளர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சட்டம் - ஒழுங்கு குறித்த புள்ளிவிவரங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், நாட்டிலேயே சிறந்த மாநகரமாக சென்னை இருக்கிறது. சட்டம்- ஒழுங்கு குறித்து முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து டிஜிபி சைலேந்திரபாபு தெரிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் தேன்மொழி, துணை ஆணையர்கள் நாகஜோதி, மீனா சியாமளா தேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x