

கர்நாடக மாநிலத்தில் இளம்பெண் மீது ஆசிட் வீசி விட்டு தலைமறைவாக இருந்த இளைஞரை அழைத்து வந்து, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கர்நாடக மாநில காவல்துறையினர் நேற்று தடயங்களை சேகரித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் உள்ள சுங்கத்கட்டே பகுதியில் வசிக்கும் 24 வயது இளம்பெண் மீது, அதே பகுதியில் வசிக்கும் நாகேஷ் என்பவர் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி ஆசிட் வீசியுள்ளார். காதலை ஏற்க மறுத்ததால், இளம்பெண் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பித்து சென்றவரை பிடிக்க 4 தனிப்படை அமைத்து கர்நாடக மாநில காவல்துறையினர் தேடி வந்தனர்.
அதில் கிடைத்த தகவலின் பேரில், திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஆசிரமத்தில் பதுங்கி இருந்த நாகேஷை, கர்நாடக மாநில காவல்துறையினர் கடந்த மே மாதம் 13-ம் தேதி கைது செய்தனர்.
இந்நிலையில், தனிப்படை காவல்துறையினர் 20 பேர், கைது செய்யப்பட்ட நாகேஷை அழைத்துக் கொண்டு திருவண்ணாமலைக்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள், கிரிவலப் பாதையில் நாகேஷ் தங்கி இருந்த இடம் மற்றும் சென்று வந்த இடங்கள் மற்றும் அண்ணாமலை அடிவாரம் என பல இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, ஆசிட் வீசும்போது நாகேஷ் பயன்படுத்தியதாக கூறப்படும் ஒரு பை உள்ளிட்ட முக்கிய தடயங்களை கர்நாடக மாநில காவல்துறையினர் சேகரித்து கொண்டு சென்றனர்.