பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்

ஈரோடு சிறுமியிடம் கருமுட்டைகள் பெற்ற வழக்கு: மேலும் ஒருவர் கைது; இரு மருத்துவமனைகளுக்கு சம்மன்

Published on

ஈரோடு: சிறுமியிடம் கருமுட்டைகள் பெற்ற விவகாரத்தில், சிறுமிக்கு 20 வயது என போலியாக ஆதார் அட்டை தயாரித்துக் கொடுத்த நபரை ஈரோடு காவல் துறையினர் கைது செய்தனர். கருமுட்டைகள் பெற்ற இரண்டு மருத்துவமனைகளுக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பிரபல கருத்தரிப்பு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று கருமுட்டை தானம் செய்வது போல் நடித்து, பணத்திற்கு விற்பனை செய்த மாலதி மற்றும் சிறுமியின் தாய் சுமையா, சுமையாவின் இரண்டாவது கணவர் சையத்அலி ஆகிய 3 பேரை கடந்த சில தினங்களுக்கு முன் ஈரோடு சூரம்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 4 ஆண்டுகளாக அவர்கள் கருமுட்டை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. சிறுமி பருவமடைந்தது முதல் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று, ஒவ்வொரு முறையும் ரூ.20,000-க்கு கருமுட்டையை விற்பனை செய்துள்ளனர்.

இதுகுறித்து காவல் துறையினர் நடத்திய தொடர் விசாரணையில் சிறுமிக்கு 20 வயது என போலியான ஆதார் அட்டை தயாரித்து கொடுத்த சூரம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜான் என்பவரை நேற்று இரவு காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும், கருமுட்டை பெற்ற வழக்கில் ஈரோடு சுதா மருத்துவமனை, பெருந்துறை ராம்பிரசாத் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளுக்கும் காவல்துறையின் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதேபோல் சேலம் மற்றும் ஓசூரைச் சேர்ந்த இரண்டு மருத்துவமனைகளுக்கும் சம்மன் அனுப்பப்படவுள்ளது என சூரம்பட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in