

பொன்னேரி: சோழவரம் அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது சகோதரி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள மாபூஸ்கான்பேட்டையைச் சேர்ந்தவர் பூபாலன் (37). கூலித் தொழிலாளியான இவர் மது அருந்தும் பழக்கம் கொண்டவர். நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த பூபாலன், மீண்டும் மது அருந்துவதற்காக அக்கா தனலட்சுமி, அவரது கணவர் ரவி ஆகியோரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த தனலட்சுமி, ரவி மற்றும் அவரது குடும்பத்தினர், பூபாலனை தாக்கி வீட்டில் உள்ள அறையில் அடைத்து வைத்தனர்.
நேற்று காலை அறை கதவை திறந்து பார்த்தபோது அவர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, சோழவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் தனலட்சுமி, ரவி, அவரது மகள்களான வெண்மதி, மஞ்சு ஆகிய 4 பேர் பூபாலனை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் அவர்களை போலீஸார் கைது செய்தனர்.