

ஆவடி: ஆவடி கவுரிபேட்டையைச் சேர்ந்தவர் மோகன்குமார் என்ற மனோஜ் (27). டிராக்டர் ஓட்டுநரான இவர், டிராக்டர் மூலம் வீடு, கடைகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்து வந்தார். இந்நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு ஆவடி புதுநகரைச் சேர்ந்த பிரபு என்பவரிடம் மனோஜ் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். பிறகு, அப்பணத்தை திருப்பித் தராததால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இச்சூழலில், நேற்று காலை மனோஜ், தண்ணீர் டிராக்டரை ஓட்டிக்கொண்டு ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் தன் நண்பர்கள் சதீஷ், பிரான்சிஸ் ஆகியோருடன் வந்த பிரபு, டிராக்டரை வழிமறித்து, மனோஜிடம் பணத்தைக் கேட்டு தகராறு செய்துள்ளார்.
அப்போது, பிரபு தன் நண்பர்களுடன் சேர்ந்து இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதில் அதே இடத்திலேயே அவர் உயிரிழந்தார். ஆவடி போலீஸார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தலைமறைவான 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.