பள்ளி, கல்லூரிகள் அருகே சோதனை: குட்கா விற்றதாக ஒரே நாளில் 132 பேர் கைது
சென்னை: பள்ளி, கல்லூரிகள் அருகே நடத்தப்பட்ட சோதனையில், குட்கா விற்றதாக ஒரே நாளில் 132 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் “புகையிலைப் பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை” என்ற சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு உள்ளாகாமல் தடுக்கும் வகையில், காவல் ஆணையர் உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் பள்ளி, கல்லூரிகள் அருகே தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, குட்கா பாக்கெட்டுகள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 132 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்தி வருவோர் மற்றும் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
