Published : 04 Jun 2022 07:31 AM
Last Updated : 04 Jun 2022 07:31 AM

ஜோலார்பேட்டை | இளம்பெண் தற்கொலை வழக்கில் மாமனார், மாமியார் கைது

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (28). ஏற்கெனவே, திருமணமான இவர், கடந்த 2019-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சரிகா (19) என்ற பெண்ணை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

திருமணம் முடிந்து சில நாட்கள் கழித்து பிரபாகரன் ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு தந்தை என்பது சரிகாவுக்கு தெரியவந்தது. இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், மனமுடைந்த சரிகா தன் தாய் வீட்டுக்கு சென்றார்.

இந்நிலையில், கடந்த 29-ம் தேதி பிரபாகரன் தனது முதல் மனைவி பூர்ணிமாவின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு, கேக் வெட்டியதாக கூறப்படுகிறது. இதையறிந்த சரிகா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு சரிகா 12 பக்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தனது தற்கொலைக்கு கணவர் பிரபாகரன், மாமியார் நவநீதம், மாமனார் ராஜா ஆகியோர்தான் காரணம் என குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் சரிகாவின் தந்தை பழனி புகார் அளித்தார். அதன்பேரில், காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி வழக்குப்பதிவு செய்து சரிகாவின் மாமனார் ராஜா, மாமியார் நவநீதம் ஆகிய 2 பேரை நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பிரபாகரனை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x