

பெங்களூரு: கர்நாடகாவில் பள்ளி பாடநூலை மாற்றி அமைப்பதற்கு 2020-ல் அப்போதைய முதல்வர் எடியூரப்பா, கல்வியாளர் ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். இந்த குழு பள்ளி பாடநூலில் இருந்து பசவண்ணர், திப்பு சுல்தான், பெரியார், பகத் சிங், நாராயணகுரு ஆகியோர் தொடர்பான பாடங்களை நீக்கியது. ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கேவர் குறித்த பாடம் சேர்த்தது. இதனை கண்டித்து காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சியினரும், முற்போக்கு மாணவ அமைப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரபல எழுத்தாளர்களின் கதைகள் நீக்கப்பட்டதற்கு, எழுத்தாளர்கள் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல அறக்கட்டளை தலைவர்களும், ஆணைய உறுப்பினர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனிடையே மாணவ காங்கிரஸார் (என்எஸ்யுஐ) துமக்கூருவில் கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷின் வீட்டை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது பாஜக அரசுக்கு எதிராகவும், பி.சி.நாகேஷூக்கு எதிராகவும் காங்கிரஸார் முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் அமைச்சரின் உருவ பொம்மையை தீ வைத்து கொளுத்திய போராட்டக்காரர்கள், தீப்பந்தங்களை அவரது வீட்டுக்குள் எறிந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதனால் போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் காங்கிரஸை சேர்ந்த 15 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.