Published : 03 Jun 2022 08:43 AM
Last Updated : 03 Jun 2022 08:43 AM

திருவண்ணாமலை அருகே செவிலியர் வீட்டில் 68 பவுன் நகை, வெள்ளி, ரூ.1.50 லட்சம் ரொக்கம் கொள்ளை: இளைஞரை அறையில் பூட்டி மர்ம நபர்கள் துணிகரம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே செவிலியர் ஒருவரது வீட்டில் 68 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி மற்றும் ரூ.1.50 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் திருமலை நகர் முதல் தெருவில் (பெருந்திட்ட வளாகம் அருகே) வசிப்பவர் நடேசன் மனைவி சுமதி(50). இவர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை செவிலியராக பணியாற்றி வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட இவரது மூத்த மகன் ராஜேஷ் வீட்டில் உள்ள நிலையில், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டாவது மகன் சென்னை சென்றிருந்தார். இவரது கர்ப்பிணி மனைவி தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், செவிலியர் சுமதி கடந்த 1-ம் தேதி இரவு பணிக்கு சென்றுவிட்டு நேற்று காலை வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு பெயர்க்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். ராஜேஷ் படுத்திருந்த அறை கதவின் வெளிபுறத்தில் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. மற்றொரு அறையில் பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு 68 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1.50 லட்சம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த திருவண்ணாமலை கிராமிய போலீஸார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x