

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், மதியம் வீட்டுக்குப் புறப்பட்டார்.
முதல்வரின் ‘கான்வாய்’ நேப்பியர் பாலத்தைக் கடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் பின் தொடர்ந்து, கான்வாயை முந்திச் செல்ல முயன்றார். அந்த வாகனத்தில் நம்பர் பிளேட்டும் இல்லை. இதனால் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, அந்த இளைஞரை மடக்கிப் பிடித்த போலீஸார், கோட்டை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அவரது வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், அவர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த அஜீத்குமார்(20) என்பதும், அவர் ஓட்டியது திருட்டு வாகனம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.