

ஆண்டிபட்டி: அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி, ரூ.23 லட்சம் மோசடி செய்ததாக அரசு ஊழியர் உட்பட 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் ராஜா, மருமகள் சோனியா காந்தி ஆகிய இருவரும் ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்துள்ளனர்.
3 தவணைகளில் ரூ.24 லட்சம்
இந்நிலையில் செல்வத்தை அணுகிய பெரியகுளத்தைச் சேர்ந்த ராமாயி அம்மாள், தான் கல்வித் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளதாகத் தெரிவித் துள்ளார். மேலும், வத்தலகுண்டு கல்வி அலுவலகத்தில் நேர்முக உதவியாளராக இருக்கும் மாரியம்மாளை அறிமுகப்படுத்தி உள்ளார்.
அப்போது, ராஜாவுக்கும், சோனியா காந்திக்கும் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 2019-ம் ஆண்டில் செல்வத் திடம் 3 தவணைகளில் ரூ.24 லட்சத்தை ராமாயி அம்மாளும், மாரியம்மாளும் பெற்றதாகக் கூறப்படுகிறது.
ரூ.1 லட்சம் மட்டுமே
ஆனால் பல மாதங்களாகியும் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தை திருப்பித் தருமாறு செல்வம் கேட்டபோது, ரூ.1 லட்சம் மட்டுமே திருப்பித் தந்துள்ளனர்.
இதையடுத்து செல்வம் அளித்த புகாரின் பேரில், தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், ராமாயி அம்மாள், மாரியம்மாள் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.