

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நகை வியாபாரியிடம் 6.2 கிலோ தங்க நகைகளை திருடிய வழக்கில், தொடர்புடையவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கீழ்பாக்கத்தைச் சேர்ந்தவர் மணி (55). நகை மொத்த வியாபாரியான இவர், தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதிகளில் உள்ள நகைக் கடைகளுக்கு நகைகளை கொண்டு சென்று கொடுப்பது வழக்கம். அதன்படி, இவர் நேற்று முன்தினம், சென்னையில் இருந்து தங்க நகைகளுடன் தஞ்சாவூர் வந்து பல்வேறு கடைகளுக்கு கொடுத்துவிட்டு, அதற்கான பணத்தையும் பெற்றுக் கொண்டார்.
அன்று இரவு சென்னை செல்வதற்கு முன்பு தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் உணவகத்துக்கு சென்றார். அப்போது உணவு வாங்குவதற்காக அவரது நகைப் பையை கீழே வைத்துவிட்டு, பணம் கொடுத்துவிட்டு பார்த்தபோது நகைப்பையை காணவில்லை.
இதுகுறித்து தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் மணி புகார் அளித்தார். திருடுபோன பையில், 5 கிலோ புதிய நகைகளும், 1.2 கிலோ உருக்கப்பட்ட நகைகளும், ரூ.14 லட்சம் ரொக்கமும் இருந்ததாக தெரிவித்திருந்தார். இதன் மொத்த மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.
குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்து வருகிறது.