Published : 01 Jun 2022 07:48 AM
Last Updated : 01 Jun 2022 07:48 AM
கிருஷ்ணகிரி: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கிருஷ்ணகிரியில் 27 பேரிடம் ரூ.78.74 லட்சம் பெற்று மோசடி செய்ததாக, துணை ஆட்சியர், வட்டாட்சியர் உட்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள அச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகரன் (39) மற்றும் இட்டிக்கல் அகரம், தேவசமுத்திரம், நக்கல்பட்டி, கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த 26 பேர், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் வெவ்வேறு காலகட்டங்களில் புகார் அளித்துள்ளனர்.
அதில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்தஇடைத்தரகர் யாரப்பாஷா, ஓசூர் சிட்கோ வட்டாட்சியர் வெங்கடேசன், கிருஷ்ணகிரி ஆட்சியரின் நேர்முக உதவியாளராக இருந்து தற்போது விழுப்புரம் மாவட்ட துணை ஆட்சியராக (ஆதிதிராவிடர் நலப்பிரிவு) பணியிடமாற்றமான ரகு குமார், மற்றும் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சண்முகம் ஆகியோர் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணம் பெற்று போலி பணி நியமன ஆணை வழங்கி தங்களை ஏமாற்றியதாக கூறியுள்ளனர்.
மேலும், ‘அவர்களிடம் கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம், ராயக்கோட்டை சாலை மேம்பாலம் அருகில், கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தின் நெடுஞ்சாலைத்துறைக்கு தொடர்புடைய 31-ம் எண் அறை உட்பட பல்வேறு இடங்களில் அரசு வேலை பெறுவதற்காக கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2019 வரை ரூ.78 லட்சத்து 74 ஆயிரம் பணத்தை கொடுத்தோம். பணத்தை பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணைகள் வழங்கினர். இதனால், மோசடி செய்த அலுவலர்கள், இடைத்தரகர் உள்ளிட்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியப்பன் தலைமையிலான குழுவினர், குற்றம் சாட்டப்பட்ட துணை ஆட்சியர் உட்பட 4 பேர் மீது நேற்று முன்தினம் மாலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT