

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நகை மொத்த வியாபாரியிடம் இருந்து 10 கிலோ தங்க நகைகளை திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்தவர் மணி(52). நகை மொத்த வியாபாரி. இவர் சென்னையிலிருந்து தஞ்சாவூரில் உள்ள நகைக்கடைகளுக்கு நகைகளை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.
அதன்படி, இவர் சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு நேற்று வந்து நகைக் கடைகளுக்கு நகைகளை கொடுத்துள்ளார். பின்னர் நேற்று இரவு 9 மணியளவில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு உணவகத்துக்கு சென்று டிபன் சாப்பிட்டுள்ளார்.
பின்னர், நகைகள் அடங்கிய பையை கீழே வைத்து விட்டு சாப்பிட்டதற்கு பணத்தை எடுத்து கொடுத்துள்ளார். அப்போது அவரை சுற்றி ஒரே நிறத்தில் உடை அணிந்த 9 பேர் வந்து நின்றுள்ளனர். பணம் கொடுத்துவிட்டு தனது பையை எடுக்க பார்த்த மணிக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கீழே வைத்திருந்த நகைப்பையை காணவில்லை. மேலும் அவரை சுற்றி நின்றிருந்தவர்களையும் காணவில்லை.
அதில் சுமார் 10 கிலோ நகைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த சம்பவம் தஞ்சாவூர் மேற்கு போலீஸில் மணி புகார் செய்தார். புகாரின்பேரில் மேற்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.