

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே வனப்பகுதியில் அனுமதியின்றி மண் அள்ளிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை அடிவாரம் பொன்னேரி வனப்பகுதியில் சிலர் அனுமதியின்றி ‘பொக்லைன்’ மூலம் மண் கடத்து வதாக வனத்துறையினருக்கு புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் நாக சதீஷ் கிடிஜாலா உத்தரவின்படி, திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் பிரபு தலைமையிலான வனத்துறையினர் பொன்னேரி வனப்பகுதியில் நேற்று சோதனை நடத்தினர்.
அப்போது பொக்லைன் மூலம் வனப்பகுதியில் சிலர் மண் அள்ளி கடத்துவது தெரியவந்தது. வனத்துறையினர் வருவதை அறிந்த மண் கடத்தல்கார்கள் அங்கிருந்து தப்பியோட முயன் றனர். அவர்களை விரட்டிச்சென்று வனத்துறை ஊழியர்கள் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் ஜோலார்பேட்டை அடுத்த டி.வீரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த திலீபன் (26), பொன்னேரி பகுதியைச் சேர்ந்த கவுதம் (25),வெங்காயப்பள்ளியைச் சேர்ந்த சுபாஷ்(30), எட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனிமுத்து (32) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, 4 பேர் மீதும் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, 4 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.