கரூர்: 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

உமர்முக்தர் (47)
உமர்முக்தர் (47)
Updated on
1 min read

கரூர்: கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள விராலிப்பட்டியைச் சேர்ந்தவர் உமர்முக்தர் (47). இவருக்கு 3 திருமணங்களாகி 3 மனைவிகளையும் பிரிந்து கடந்த 5 ஆண்டுகளாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள சின்னதாராபுரம் முதலியார் தெருவில் தங்கி டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்தார். இவர் கடந் ஆண்டு செப்.7-ம் தேதி தன் வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்த பக்கத்து வீட்டை சேர்ந்த தனியார் பள்ளியில் யுகேஜி படிக்கும் 5 வயதான சிறுமியை வீட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் சின்னதாராபுரம் போலீஸ் உமர்முக்தர் மீது போக்சோ (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும்) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று (மே 31ம் தேதி) நீதிபதி நசீமாபானு தீர்ப்பளித்தார். அதில், சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதமும் அதனை கட்டத் தவறினால் மேலும் ஒராண்டு சிறைத் தண்டனையும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் அதனைக் கட்டத்தவறினால், மேலும் ஒராண்டு சிறைத் தண்டனையும், இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடை இத்தீர்ப்பு நகல் கிடைக்கப்பெற்ற 3 மாதங்களுக்குள் வழங்கவும் உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in