

சண்டிகர்: பஞ்சாபின் பிரபல பாடகர் சித்து மூஸ் வாலா (28). கடந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மான்சா தொகுதியில் போட்டியிட்ட அவர், ஆம் ஆத்மி வேட்பாளர் விஜய் சிங்லாவிடம் தோல்வி அடைந்தார்.
பஞ்சாபை சேர்ந்த 424 விஐபிக்களுக்கான போலீஸ் பாதுகாப்பை மாநில அரசு அண்மையில் வாபஸ் பெற்றது. அதில் சித்து மூஸ் வாலாவும் ஒருவர். அவருக்கு 6 போலீஸார் பாதுகாப்பு வழங்கி வந்தனர். இதை மாற்றி 2 போலீஸார் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த சூழலில் மர்ம நபர்கள் சிலர் சித்து மூஸ் வாலாவை நேற்று முன்தினம் சுட்டுக் கொன்றனர்.
இந்நிலையி்ல் மூஸ் வாலா கொலைக்கு கனடாவில் தலைமறைவாக வாழும் ரவுடி கோல்டி பிரார் பொறுப்பேற்றுள்ளார். பஞ்சாபின் பரித்கோட் பகுதியை சேர்ந்த கோல்டி பிரார் மீது பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவைகள் உள்ளன. இந்நிலையில் மூஸ் வாலா கொலை குறித்து சிபிஐ, என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை முதல்வர் பகவந்த் மான் ஏற்றுக் கொண்டுள்ளார்.