சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலின் உப கோயில் சிலைகளை புனரமைப்பதாக நிதி திரட்டிய யூடியூபர் கைது

சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலின் உப கோயில் சிலைகளை புனரமைப்பதாக நிதி திரட்டிய யூடியூபர் கைது
Updated on
1 min read

திருவள்ளூர்: பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் பிரசித்திப் பெற்ற மதுர காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் உப கோயில்களில் சுவாமி சிலைகள் பழுதடைந்துள்ளன. அவ்வாறு பழுதான சிலைகளை புனரமைப்பதாகக் கூறி, திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் கோபிநாத் (33) என்ற யூடியூபர், சமூக வலைதளம் மூலம் பொதுமக்களிடம் 34 லட்சம் ரூபாய் நிதி திரட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில் செயல் அலுவலர் தா.அரவிந்தன் அளித்த புகாரின்பேரில், ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு போலீஸார், நேற்று கார்த்திக் கோபிநாத்தை கைது செய்தனர்.

பின்னர் அம்பத்தூர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி திவ்யா உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் கார்த்திக் கோபிநாத் கைதுக்கு பாஜக மாநில தமிழகத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in