

சேலம்: சேலத்தில் மூன்றாம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 5ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் போக்சோ சிறப்பு நீதி மன்றத்தில் விதிக்கப்பட்டது.
சேலம் மூன்று ரோடு அருகே உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சதீஷ்குமார். இவர் வகுப்பில் மூன்றாம் வகுப்பு பயிலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது சம்பந்தமாக சிறுமி பெற்றோரிடம் புகார் செய்ததை அடுத்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி ஆசிரியர் சதீஷை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் விசாரணையில் சிறுமிக்கு கணித ஆசிரியர் சதீஷ் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சேலம், சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சதீஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு நீதி மன்றத்தில் நடந்தது வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமிக்கு பாலியல் தொல்லை காடுத்த வழக்கில் சதீஷுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.