Last Updated : 30 May, 2022 07:02 PM

 

Published : 30 May 2022 07:02 PM
Last Updated : 30 May 2022 07:02 PM

தேனி | அலுவலகத்தில் பெண் அலுவலரை வெட்டிய அரசு ஊழியர் கைது; காயமடைந்தவருக்கு தீவிர சிகிச்சை

ராஜராஜேஸ்வரி, உமாசங்கர்.

தேனி: தனது பதவி உயர்வுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்ததாக கூறி, தேனி குழந்தைகள் வளர்ச்சிக்குழு திட்ட பெண் அலுவலரை அலுவலகத்தில் புகுந்தது அரிவாளால்வெட்டிய இளநிலை உதவியாளர் கைது செய்யப்பட்டார். பலத்த காயமடைந்த பெண் அலுவலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தேனி ஆட்சியர் அலுவலகம் அருகே பெருந்திட்ட வளாகத்தில் சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிக்குழு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் திட்ட அலுவலராக ராஜராஜேஸ்வரி (52) பணிபுரிந்து வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டில் உமாசங்கர் (42) என்பவர் இங்கு இளநிலை உதவியாளராக பணி புரிந்து வந்தார். அப்போது கோப்புகளை சரியாக பராமரிக்காதது உள்ளிட்ட பிரச்னைக்காக திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி உமாசங்கருக்கு 17ஏ விதிமுறையின் கீழ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து அதே நிலை நீடித்ததால் 17பி விதிமுறையின் கீழ் அலுவல் நடவடிக்கை எடுத்தார். இந்த விபரங்கள் உமாசங்கரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு விசாரணை நிலையிலே உள்ளது.

இதனைத் தொடர்ந்து உமாசங்கர் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தில் இளநிலை உதவியாளராக பணிமாறுதல் செய்யப்பட்டார். இவர் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் இவரின் பதவி உயர்வுக்கு தடையாணை விதிக்கப்பட்டது. தன்னை விட இளநிலையில் உள்ள பணியாளர்கள் பலரும் பதவி உயர்வு பெற்றதால் மனவருத்தத்திலே இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்துவிட்டு சொந்த ஊரான போடிக்கு வந்த உமாசங்கர் பிற்பகல் தேனி வந்தார். பையில் அரிவாளை மறைத்து வைத்தபடி வந்த அவர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிக்குழு அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கு பணி செய்து கொண்டிருந்த ராஜராஜேஸ்வரியை ஆத்திரத்தில் வெட்டினார். இதில் அவருக்கு கை, காது, வலது கன்னம் மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

உயிர் தப்புவதற்காக ராஜராஜேஸ்வரி, அருகில் இருந்த கண்காணிப்பாளர் அறைக்குள் ஓடினார். இதைப் பார்த்த கண்காணிப்பாளர் முத்துமணி உதவிக்கு அலுவலர்களை அழைத்தார். அருகில் இருந்து பணியாளர்கள் உமாசங்கரை தடுத்து கீழே தள்ளினர். இது குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஆட்சியர் க.வீ.முரளீதரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன்உமேஷ்டோங்கரோ ஆகியோர் அலுவலகத்திற்கு வந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவச் சிகிச்சைக்கு அனுப்பினர்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மேல் சிகிச்சைக்காக ராஜராஜேஸ்வரி அனுப்பப்பட்டார். தகவலை கேள்விப்பட்ட அங்கன்வாடிப் பணியாளர்கள் ஏராளமானோர் அலுவலகத்திலும், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலும் கூடினர். தேனி போலீஸார் வழக்குப்பதிவு செய்து உமாசங்கரை கைது செய்தனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், “ராஜராஜேஸ்வரி தற்போது சிகிச்சை பெற்றுவருவதால் விசாரிக்க முடியவில்லை. மயக்கம் தெளிந்ததும் விசாரணை நடைபெறும். அப்போதுதான் முழுவிபரம் தெரிய வரும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x