

ஈரோட்டில் மருத்துவர் வீட்டில் 45 பவுன் நகை மற்றும் ரூ. 3 லட்சம் திருடுபோன வழக்கு தொடர்பாக தனியார் மருத்துவமனை ஊழியர் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்,
ஈரோடு பெருந்துறை சாலை டாக்டர் தங்கவேல் வீதியைச் சேர்ந்தவர் விஷ்ணுதீபக் (44). தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிகிறார். இவரது மனைவி சத்யா. இவர்கள் கடந்த 22-ம் தேதி விருதாச்சலத்துக்கு சென்றனர். நேற்று முன்தினம் அதிகாலை வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 45 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம், அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், திருட்டு நடந்த வீடு மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், விஷ்ணுதீபக்கின் தந்தை மருத்துவர் சந்திரனின் கிளினிக்கில் பணிபுரியும் வசந்தகுமார் என்பவர் இத்திருட்டுக்கு மூளையாக செயல்பட்டு தனது நண்பர்களுடன் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து, வசந்தகுமார் அவரது தம்பி உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக ஈரோடு டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமார் கூறியதாவது:
மருத்துவர் விஷ்ணுதீபக்கின் தந்தை சந்திரன் மருத்துவமனையில் பல ஆண்டுகளாக பணிபுரியும் கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவரிடம் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தார். பின்னர் தனது நண்பர்களுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார்.
மேலும், அவர் அளித்த தகவல் அடிப்படையில், கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த அவரது தம்பி அருண்குமார் (24), நண்பர்கள் பிரவீன் குமார் (26), பிரித்விராஜ் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம், கால் கிலோ வெள்ளிப் பொருட்கள், திருட்டுக்கு பயன்படுத்திய கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
கைதான 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீஸாரை, எஸ்பி சசிமோகன் பாராட்டினார்.