Published : 28 May 2022 12:20 PM
Last Updated : 28 May 2022 12:20 PM

சென்னை | மனைவி, குழந்தைகளை கொன்று ஐடி ஊழியர் தற்கொலையா? - காவல் ஆணையர் ரவி விளக்கம்

சென்னை: சென்னை பொழிச்சலூரில் ஐடி ஊழியர் ஒருவர் மனைவி, மகன், மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ரவி விளக்கமளித்துள்ளார்.

நடந்தது என்ன? சென்னை பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (41). இவர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு காயத்திரி (39) என்ற மனைவியும், நித்யஸ்ரீ (13) என்ற மகளும், ஹரி கிருஷ்ணன் என்ற 8 வயது மகனும் இருந்தனர்.
இந்நிலையில் இன்று அவர் மனைவி, மற்றும் குழந்தைகளுடன் கழுத்தறுபட்ட நிலையில் வீட்டில் சடலமாகக் கிடந்தார். அருகில் உள்ள சுவற்றில் ஒரு தற்கொலைக் கடிதம் ஒட்டப்பட்டிருந்தது. அதில் மின் ரம்பத்தால் மனைவி, குழந்தைகளை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தானும் வழுது கையால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தற்கொலைக்கு வேறு யாரும் காரணமில்லை என்றும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக சங்கர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல் ஆணையர் விளக்கம்: இந்த கொடூர சம்பவம் குறித்து தாம்பரம் காவல் ஆணையர் ரவி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "வீட்டில் 4 பேர் சடலமாகக் கிடந்தனர். அருகிலேயே சுவற்றில் தற்கொலைக் கடிதம் ஒட்டப்பட்டுள்ளது. ரத்தம் உறைந்திருக்கும் அளவைப் பார்க்கும்போது குற்றம் இரவு 11 மணிக்குப் பின்னர் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். பிரகாஷின் மனைவி, குழந்தைகள் யாரும் அலறி துடித்தது போல் கால், கைகள் நகர்ந்ததாகத் தெரியவில்லை. அதனால் மயக்க மருந்து கொடுத்து கழுத்தறுக்கப்பட்டிருக்கலாமோ என்று சந்தேகப்படுகிறோம். உடற்கூறாய்வு அறிக்கை வந்தபின்னரே இன்னும் பல தகவல்கள் உறுதியாகும். உயிரிழந்த பிரகாஷின் செல்போனை ஆய்வு செய்யவுள்ளோம். அவர் கடந்த 19 ஆம் தேதியன்று ஆன்லைன் வாயிலாக மின் ரம்பம் வாங்கியுள்ளார். தற்கொலை கடிதம் இருந்தாலும் யாரேனும் மிரட்டி தற்கொலைக்கு தூண்டினார்களா? கடன் பிரச்சினையா? இல்லை கொலை செய்துவிட்டு தற்கொலை போல் அரங்கேற்றினரா என்ற கோணங்களில் விசாரிக்கிறோம். வீட்டின் கதவு திறந்தே இருந்ததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகத்தின் பேரில் வீட்டினுள் சென்று பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.வீட்டிலிருந்து ரூ.3.50 லட்சம் கடன் பத்திரம் கைப்பற்றப்பட்டுள்ளது" என்றார்.

உயிரிழந்த பிரகாஷ் தனது திருமண நாளிலேயே தற்கொலையை நிகழ்த்தியுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x