Published : 27 May 2022 08:04 AM
Last Updated : 27 May 2022 08:04 AM

மீனவப் பெண் கொலை சம்பவம்: ராமேசுவரத்தில் ‘ட்ரோன்' மூலம் போலீஸார் ஆய்வு

ராமேசுவரம் வடகாடு பகுதியில் எஸ்.பி. கார்த்திக் தலைமையில் ஆய்வு மேற்கொண்ட போலீஸார்.

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் மீனவ பெண் கொலை வழக்கில் 6 ஒடிசா மாநில இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் ட்ரோன் கேமராவை பயன்படுத்தி நேற்று ஆய்வு செய்தனர்.

ராமேசுவரத்தில் உள்ள வடகாடுமீனவ கிராமத்தைச் சேர்ந்த பாசி சேகரிக்கும் 45 வயது மீனவப் பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக உறவினர்கள், கிராம மக்கள் ராமேசுவரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தொடர் சாலை மறியல்போராட்டத்தில் நேற்று முன்தினம்(மே 25) ஈடுபட்டனர். மேலும் வடகாட்டில் இருந்த இறால் பண்ணையும் அடித்து நொறுக்கப்பட்டது.

கொலை செய்யப்பட்டவரின் கணவர் ராமேசுவரம் காவல் நிலையத்தில் தனது மனைவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அளித்த புகாரின் அடிப்படையில், வடகாடு இறால் பண்ணையில் பணியாற்றிய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சன் ரானா (34), ராகேஷ் (25), விகாஸ் (24), பிரகாஷ் (22), பிரசாத் (18), பின்டு (18) ஆகிய இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் நகைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துஉள்ளனர்.

நேற்று ராமேசுவரம் வடகாடு பகுதியில் மீனவ பெண் கொலைசெய்யப்பட்டு உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தலைமையில் போலீஸார் ட்ரோன் கேமரா மூலம் கூடுதல் தடயங்களுக்காக ஆய்வு மேற்கொண்டனர். மேலும், ராமேசுவரம் வர்த்தகன் தெருவில் உள்ள நகைக் கடைகளிலும் விசாரணை மேற்கொண்டனர்.

முன்னதாக வடகாடு மீனவ மக்கள் தாக்குதல் நடத்தியதால் காயமடைந்த 6 வடமாநில இளைஞர்களும் மதுரை அரசு தலைமைமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டிருந்தனர். 6பேரையும் நேற்று மதியம் மதுரையிலிருந்து அழைத்து வந்து மண்டபம் காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x