

சென்னை: சென்னையில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சேலத்தில் தலைமறைவாக இருந்த 4 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் பாலச்சந்தர்(30).மத்திய சென்னை மாவட்ட பாஜக எஸ்சி பிரிவு தலைவராக இருந்த இவருக்கு அச்சுறுத்தல் இருந்ததால், துப்பாக்கி ஏந்தியபோலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாலச்சந்தர்,சிந்தாதிரிப்பேட்டை சாமிநாயக்கர் தெருவில் கடந்த 24-ம் தேதி ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பாலச்சந்தருக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் பாலமுருகன் தேநீர் அருந்த சென்றிருந்த நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய, 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதற்கிடையே, பணியில் கவனக் குறைவாக இருந்ததாக காவலர் பாலமுருகனை பணியிடை நீக்கம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
போலீஸாரின் முதல் கட்டவிசாரணையில், சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த ரவுடி தர்கா மோகனின் மகன்கள் பிரதீப் (26), சஞ்சய் (24), கூட்டாளிகள் அதே பகுதியைச் சேர்ந்த கலைராஜன் (28), ஜோதி (30) ஆகியோருடன் சேர்ந்து முன் விரோதம் காரணமாக பாலச்சந்தரை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், அவர்களைத் தேடி வந்தனர்.
இதற்கிடையே தேடப்படும் நபர்கள், சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே குஞ்சாம்பாளையம் பகுதியில் தொழிலதிபர் பழனிசாமிஎன்பவர் வீட்டில் பதுங்கியிருப்பதாக தனிப்படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அத்தகவலின் அடிப்படையில் அந்த வீட்டுக்கு நேற்று முன்தினம்நள்ளிரவு சென்ற போலீஸார், அங்கிருந்த 4 பேரையும் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து 3 கத்தி, ஒரு பைக், ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 4 பேரையும் தனிப்படை போலீஸார் சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதே வேளையில் கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது தொடர்பாக தொழிலதிபர் பழனிசாமியிடம் போலீஸார் விசாரணை செய்தனர். பொக்லைன் இயந்திரங்களை வாடகைக்கு விடும் தொழில்செய்து வரும் பழனிசாமி, தமிழகம்முழுவதும் தொழில் தொடர்பாகசெல்வதும், அப்படி செல்லும்போது ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் 4 பேரையும் ஒருநாள் இரவு மட்டும் வீட்டில் தங்குவதற்கு அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டதும், அதன்பேரில் பழனிசாமி தனது வீட்டில் 4 பேரையும் தங்க வைத்ததும் தெரியவந்தது.
இது தொடர்பாக போலீஸார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
| ‘வாழ விடாததால் கொலை செய்தோம்' கைது செய்யப்பட்ட சகோதரர்கள் பிரதீப், சஞ்சய் ஆகியோர் பாஜக பிரமுகரை கொலை செய்தது ஏன் என்பது குறித்து அளித்துள்ள வாக்குமூலத்தில், “கொலை செய்யப்பட்ட பாலச்சந்தரும், நாங்களும் சிந்தாதிரிப்பேட்டையிலேயே பிறந்து வளர்ந்தோம். நண்பர்களாகவே இருந்தோம். ஆனால், அவர் பாஜகவில் சேர்ந்த பிறகு அவரது செயல்பாட்டில் மாற்றம் காணப்பட்டது. எங்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தார். அது மட்டும் அல்லாமல் எங்களை போலீஸில் மாட்டிவிட்டு சிறைக்கு அனுப்பினார். அது மட்டுமல்லாமல் அண்மையில் எனது தந்தை தர்கா மோகனும் சிறைக்குச் செல்ல காரணமானார். பலமுறை மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் தோல்வியடைந்தன. எனவே அவர் இருக்கும் வரை எங்களை வாழ விடமாட்டார் என்ற முடிவுக்கு வந்தோம். கடைசியாக ஒரு முறை சமாதான பேச்சுவார்த்தைக்கு வருமாறு கொலை நடப்பதற்கு ஒரு மணி நேரத்து முன் அழைத்தோம். ஆனால், அவர் பிடிகொடுக்கவில்லை. எனவே, அவரை கொலை செய்தோம்” என பிரதீப், சஞ்சய் இருவரும் வாக்குமூலமாக தெரிவித்ததாக போலீஸார் தெரிவித்தனர். |