3 மாநிலங்களில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 3 தம்பதி ஈரோட்டில் கைது: 40 பவுன் நகை, ரூ.75 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

3 மாநிலங்களில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 3 தம்பதி ஈரோட்டில் கைது: 40 பவுன் நகை, ரூ.75 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்
Updated on
1 min read

ஈரோடு: தமிழகத்தில் 12 மாவட்டங்களில், தொடர் கொள்ளையில் ஈடுபட்ட தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த3 தம்பதியை ஈரோடு போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 பவுன் நகை, ரூ.75 ஆயிரம்ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு தாலுகா காவல் நிலையஎல்லைக்கு உட்பட்ட மூலப்பாளையம், ரங்கம்பாளையம், கே.கே.நகர், திண்டல், ரகுபதி நாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், ஆள் இல்லாத வீடுகளின் பூட்டைஉடைத்து அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து எஸ்பி சசி மோகன் உத்தரவின் பேரில், போலீஸார் ரோந்துப் பணியினைத் தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் ஈரோடு தாலுகா போலீஸார், நேற்று முன்தினம் இரவு, ரங்கம்பாளையம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாடிய நபரைப் பிடித்துவிசாரித்தனர். இதில், அவர் தெலங்கானா மாநிலம் வாராங்கல் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பதும், கொள்ளை சம்பவங்களில் தொடர்புஉள்ளவர் என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: தெலங்கானா மாநிலம் வாராங்கலைச் சேர்ந்த சூர்யா (24) பாரதி (22), மணி (38) - மீனா (26), விஜய் (42) - லட்சுமி (26) தம்பதியர் ஈரோடு தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு, வியாபாரிகள் போலவும், பிச்சை எடுப்பது போலவும் நடமாடி, ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு, இரவு நேரத்தில் அந்த வீட்டின் பூட்டை உடைத்துபணம், நகைகளைக் கொள்ளையடித்து வந்துள்ளனர். இவர்களதுகுழந்தைகளையும் கொள்ளைச்சம்பவத்துக்கு பயன்படுத்திஉள்ளனர் என்றனர்.

இதையடுத்து சூர்யா உள்ளிட்ட6 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 40 பவுன் நகை, ரூ.75 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

ஈரோடு நகர காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்தகுமார் கூறியதாவது: கைதானவர்கள் மீது தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் தலா 40 வழக்குகளுக்கு மேல் உள்ளன. தமிழகத்தில் 12 மாவட்டத்தில் இதேபோல் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக, 30 வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர்களை தமிழகத்தில் முதல் முறையாக ஈரோட்டில்தான் கைது செய்துள்ளோம். இவர்களது குழந்தைகளை அருகில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைக்க உள்ளோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in