

திருப்பூர்:திருப்பூரில் சேடர்பாளையம் மெட்டுவாதோட்டம் பாலாஜி நகரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தவர் பூமாரி (35). இவர், தனது இரு ஆண் குழந்தைகளுடன் கடந்த 22-ம் தேதி இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவரது கணவர், வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வந்த நிலையில் தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில், பூமாரியுடன் வடமாநிலத்தைச் சேர்ந்த ஆண் நண்பர் வசித்து வந்துள்ளார். தற்போது, தலைமறைவாகியுள்ள அந்த ஆண் நண்பரை தேடும் பணியில் 4 தனிப்படை போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, “பூமாரியுடன் தங்கியிருந்த ஆண் நண்பர், அலைபேசி உள்ளிட்டவைகளை இதுவரை பயன்படுத்தவில்லை. இவர், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் வசித்து வந்துள்ளார். அவரை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவரை தேடி வருகிறோம்.
இதற்கிடையே, திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே ஆணைவடபாதியை சேர்ந்த அம்மையப்பன் கிராமத்தில் வசிக்கும் கணேசனின் சகோதரி, பூமாரியின் உறவினர்களை அழைத்துவந்துள்ளோம். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 3 பேரின் சடலங்களையும் அவர்களிடம் ஒப்படைக்க உள்ளோம்” என்றனர்.