

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே 750 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவின்பேரில், மாவட்ட எஸ்பி பாஸ்கரன் தலைமையில் மதுரை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க, தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் கண்ணாத்தாள், உதவி ஆய்வாளர் அருண்குமார், காவலர்கள் அடங்கிய தனிப்படையினர், மதுரை - தேனி சாலையில் நேற்று முன்தினம் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
முத்துபாண்டிபட்டி விலக்கு அருகே சந்தேகத்தின்பேரில் 2 கார்களை வழிமறித்து அவர்கள் சோதனையிட்டனர். தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் 67 மூட்டைகளில் சுமார் 750 கிலோ எடை கொண்ட குட்கா, புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் காரில் வந்தவர்கள் உசிலம்பட்டி கொங்கபட்டியைச் சேர்ந்த ஜெயவீரன் மகன் பிரகாஷ் (25) , கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ராமச்சந்திரத்தைச் சேர்ந்த மாதேஸ் மகன் மூர்த்தி(24), தர்மபுரி மாவட்டம், பிடமனேரி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த சேகர் மகன் விக்னேஷ்(31), கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை அருகிலுள்ள சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்த முன்ராஜ் மகன் அம்பரீஷ் (28) சுந்தரேஷ் மகன் திரிசங்கு (34) என்பதும், அவர்கள் தேனி பகுதியில் இருந்து காரில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. அவர்களை போலீஸார் கைது செய்து கார், குட்காவை பறிமுதல் செய்தனர்.
தனிப் படையினரை தென்மண்டல ஐஜி, டிஐஜி, எஸ்பி ஆகியோர் பாராட்டினர்.