கரூர் | இருதரப்பு தகராறில் பேச்சுவார்த்தை நடத்த துணையாகச் சென்ற பட்டதாரி இளைஞர் அடித்துக் கொலை

கரூர் | இருதரப்பு தகராறில் பேச்சுவார்த்தை நடத்த துணையாகச் சென்ற பட்டதாரி இளைஞர் அடித்துக் கொலை
Updated on
1 min read

கரூர்: இருதரப்பு தகராறில் பேச்சுவார்த்தை நடத்த உறவினருக்கு துணையாகச் சென்ற பட்டதாரி இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் தன்னாசியப்பன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அரவிந்த்(28). எம்.இ பட்டதாரியான இவர், டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வந்தார். இவரது உறவினர் பனையம்பாளையம் சமத்துவபுரத்தைச் சேர்ந்த சூர்யா(20). இவர், அருகில் உள்ள நஞ்சை காளக்குறிச்சி கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கும், திருவிழாவுக்கு வந்திருந்த இளைஞர்கள் சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, சூர்யாவிடம் தகராறில் ஈடுபட்ட ராஜபுரத்தைச் சேர்ந்த மதன்(29), பஞ்சமாதேவியைச் சேர்ந்த அபிஷேக்(19) உள்ளிட்ட இளைஞர்கள் சிலர் நேற்று முன்தினம் சின்னதாராபுரத்துக்குச் சென்று, இப்பிரச்சினை தொடர்பாக பேச வேண்டும் என சூர்யாவை செல்போனில் தொடர்புகொண்டு அழைப்புவிடுத்தனர். அவர்களுடன் பேசுவதற்காக, அரவிந்த்தை சூர்யா துணைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

சின்னதாராபுரம் பங்களா தெரு பகுதியில் அவர்கள் சந்தித்துக்கொண்ட நிலையில், திடீரென சூர்யா, அரவிந்த் ஆகியோரை மதன், அபிஷேக் உள்ளிட்டோர் கட்டையால் தாக்கத் தொடங்கினர். உடனடியாக சூர்யா அங்கிருந்து தப்பிச் சென்றுவிட, அரவிந்த் கட்டையால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார். அவரை அங்கிருந்தோர் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அரவிந்த் உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த சின்னதாராபுரம் போலீஸார், அரவிந்த்தின் உடலைக் கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், மதன், அபிஷேக் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in