சென்னை | துப்பாக்கி பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை

சென்னை | துப்பாக்கி பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை
Updated on
1 min read

சென்னை: சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலச்சந்தர் (30). இவர், மத்தியசென்னை பாஜக எஸ்.சி. பிரிவுமாவட்டத் தலைவராக இருந்தார். இவர் நேற்று இரவு 7.50 மணிக்கு சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கன் தெருவில் நின்று கொண்டிருந்தார். அவருக்கு பாதுகாப்புக்காக சென்ற துப்பாக்கி ஏந்திய காவலர் பாலகிருஷ்ணன், அருகில் இருந்த டீக்கடைக்கு டீ அருந்தச் சென்றிருந்தார்.

அப்போது, 3 பேர் கொண்ட கும்பல் பாலச்சந்தரை நடுரோட்டில் திடீரென்று சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் பாலச்சந்தர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் தப்பியோடியது.

கொலை செய்யப்பட்ட பாலச்சந்தருக்கு ஏற்கெனவே கொலை மிரட்டல் இருந்து வந்துள்ளது. எனவே அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு பாலச்சந்தரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை போலீஸ்காரர் வீரபுத்திரனை, 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, ‘எப்படியும் பாலச்சந்தரைக் கொலை செய்துவிடுவோம்’ என்று மிரட்டல் விடுத்திருந்தனர்.

மிரட்டல் தொடர்பாக போலீஸ்காரர் வீரபுத்திரன் அளித்த புகாரின்பேரில் சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் வழக்கு பதிந்து ஒருவரை கைது செய்தனர். மேலும், 2 பேரை தேடி வந்தனர். இந்நிலையில்தான், பாலச்சந்தர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in