Published : 25 May 2022 06:21 AM
Last Updated : 25 May 2022 06:21 AM

வெடிபொருட்களை கடத்த முயன்ற வழக்கில் இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட 5 பேர் குற்றவாளிகள் - பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வெடிபொருட்களை இலங்கைக்கு கடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட 5 பேரும் குற்றவாளிகள் என பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வெடிகுண்டு செய்ய தேவையானப் பொருட்களை வெளிமாநிலத்தில் இருந்து சென்னைக்கு வரவழைத்து இலங்கைக்கு கடத்த முயன்றதாக சென்னை பூக்கடை பெரியமேடு அருகே இலங்கைத் தமிழர்களான சிவகரன் என்ற சிவா, முத்து என்ற சம்பட்டி, வேலுசாமி என்ற பிரபாகரன், கிரிதரன், கருணாகரன் உள்ளிட்ட 13 பேர் மீது க்யூ பிரிவு போலீஸார் கடந்த 2007-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர்களில் 7 பேர் தலைமறைவாகினர். ஒருவர் இறந்து வி்ட்டதால் எஞ்சிய 5 பேர் மீதான வழக்கு மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. க்யூ பிரிவு போலீஸார் தரப்பில் அரசு வழக்கறிஞர் என்.விஜயராஜ் ஆஜராகி வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளவழகன், குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளார்.

அயல்நாட்டவர் சட்டப்படி..

மேலும் 5 பேர் மீதான ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டுள்ளார். அயல்நாட்டவர் சட்டப்படி இலங்கையைச் சேர்ந்த சிவகரன் மற்றும் முத்து ஆகியோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x