Published : 25 May 2022 10:07 AM
Last Updated : 25 May 2022 10:07 AM
அரக்கோணம்: அரக்கோணம் அருகே தம்பதியை கொலை செய்து உடலை சாலையோர முட்புதரில் மர்ம நபர்கள் வீசிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருவதாக டிஐஜி ஆனி விஜயா தெரிவித்துள்ளார்.
அரக்கோணத்தை அடுத்த கைலாசபுரம் சாலை கிராமத்தில் உள்ள சாலையோர முட்புதரில் ஒரு ஆண் மற்றும் பெண் உடல்கள் இருப்பதாக அரக்கோணம் கிராமிய காவல் துறையினருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அதன்பேரில், அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், ஆய்வாளர் சேதுபதி மற்றும் காவலர்கள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் காஞ்சிபுரம் புஞ்சை அரசந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த பட்டு நெசவு தொழிலாளி மாணிக்கம் (52), அவரது மனைவி ராணி (47) என்பது தெரியவந்தது.
இவர்களுக்கு சசிகலா என்ற மகளும், பெருமாள் என்ற மகனும் இருப்பது தெரியவந்தது. மாணிக்கத்துக்கு கடுமையான கடன் தொல்லை இருந்துள்ளது. கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து புறப்பட்டவர்களை பின்னர் தொடர்பு கொள்ள முடியவில்லை. இருவரும் உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, இருவரின் உடலையும் மீட்ட கிராமிய காவல் துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
5 தனிப்படைகள் அமைப்பு
தம்பதி உடல் மீட்கப்பட்ட இடத்தை வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா ஆய்வு செய்தார். இந்த வழக்கு தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். கடன் பிரச்சினை காரணமாகவே இருவரும் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், பெற்றோரின் உடலை பார்ப்பதற்காக காஞ்சிபுரத்தில் இருந்து மகள் சசிகலா, மகன் பெருமாள் ஆகியோர் நேற்று பிற்பகல் அரக்கோணம் வந்துள்ளனர். இருவரும் பெற்றோரை இழந்த விரக்தியில் விஷம் குடித்துவிட்டு சாலை கிராமத்துக்கு பேருந்தில் புறப்பட்டுள்ளனர். சாலை கிராமத்தில் இறங்கிய இருவரும் நடந்துசெல்லும்போது திடீரென மயக்கமடைந்து விழுந்தனர். அவ்வழியாகச் சென்றவர்கள் இருவரையும் மீட்டு அரக்கோணம் அரசுமருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT