

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே ஆவுடையார்பட்டினத்தில் முன்னாள் ஜமாத் தலைவரை கொன்று, 170 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் நேற்று 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஆவுடையார்பட்டினம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் நிஜாம் முகைதீன்(55). இவர், கடந்த மாதம் ஏப்.24-ம் தேதி அவரது வீட்டில் ஒரு கும்பலால் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டார். அப்போது, வீட்டில் இருந்த அவரது மனைவி ஆயிஷாபீவியை கத்திமுனையில் மிரட்டியதுடன், அவரை கட்டிப்போட்டுவிட்டு அந்தக் கும்பல், வீட்டில் இருந்த 170 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது.
இச்சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்ய மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெரினா பேகம் தலைமையில், டிஎஸ்பி மனோகரன், ஆய்வாளர் சாமுவேல் ஞானம், உதவி ஆய்வாளர்கள் அன்பழகன், மாரிமுத்து, பிரபாகரன் உள்ளிட்டோரைக் கொண்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இவர்கள் மேற்கொண்ட புலனாய்வில், ஆவுடையார்பட்டினத்தைச் சேர்ந்த சேக் முகமது யூசுப், அன்னவாசலைச் சேர்ந்த கதிரவன், லோகேஷ், நாகையைச் சேர்ந்த முகமது யூனுஸ், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சூர்யா, காந்த், ஜெயப்பிரகாஷ், உசிலங்காட்டைச் சேர்ந்த ரதீஷ் ஆகிய 8 பேர் தனிப்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து 61 பவுன் நகைகள், 188 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்கள், 2 கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் கூறியது: 8 பேருடன் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டு தற்போது வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ள ஒருவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அந்தப் பகுதியில் இருந்த செல்போன்களின் தொடர்புகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் புலனாய்வுக்கான துப்பு கிடைத்தது என்றார்.