

ஈரோடு: பெருந்துறை அருகே அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையைத் திருடிச் சென்றவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த சத்திநகரைச் சேர்ந்தவர் சுப்புரத்தினம். சிப்காட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி உமா, அரசுப் பள்ளி ஆசிரியை. சென்னையில் உள்ள மகளைப் பார்ப்பதற்காக இருவரும் சென்னை சென்று விட்டு நேற்று வீடு திரும்பினர்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 6 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்து பெருந்துறை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், அருகில் உள்ள வீட்டிலும் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அந்த வீட்டின் உரிமையாளர் வெளியூர் சென்றுள்ள நிலையில், அவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வந்தபின்புதான், திருடப்பட்ட பொருட்கள் குறித்த விவரம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், வீடு வாடகைக்கு உள்ளதா என பல இடங்களில் விசாரித்துச் சென்றது தெரியவந்துள்ளது.