Published : 23 May 2022 06:40 AM
Last Updated : 23 May 2022 06:40 AM

கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் சமரசம் செய்யப்போன இந்து முன்னணி நிர்வாகி கொலை

உடுமலை: உடுமலையில் இரு குடும்பத்தினரிடையே பணம் கொடுக்கல் வாங்கலில் சமரசம் செய்யப்போன இந்து முன்னணி நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஏரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் குமரவேல்(30). இந்து முன்னணியின் வடக்கு நகர செயலாளர். அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் - வளர்மதி தம்பதி குமரவேலுக்கு அறிமுகமானவர்கள். இவர்கள்வீட்டருகே, திருநெல்வேலிமாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த ரஞ்சித்-கவிதா தம்பதி அண்மையில் குடிவந்துள்ளனர்.

சுய உதவி குழு மூலம் வளர்மதி, கவிதாவுக்கு கடனுதவி செய்துள்ளததாகவும், ஆனால் வாங்கிய கடனை கவிதா கடந்த 5 மாதங்களாக திருப்பி செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, இருதரப்பினரிடையே பிரச்சினை எழுந்தது. இந்த விவகாரத்தில் பிரவீன் சார்பாக இந்து முன்னணி நிர்வாகி குமரவேல் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இப்பிரச்சினை முடிவுக்கு வராதநிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்னர் உடுமலை போலீஸாரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மூன்று மாதங்களுக்குள் கடனை திருப்பி செலுத்த வேண்டும் என பேசி முடித்து போலீஸார் அவர்களை அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று ரஞ்சித் -கவிதா தம்பதி யாருக்கும் தெரியாமல் வாடகை வீட்டை காலி செய்து, வீட்டு சாமான்களை சரக்கு வாகனம் ஒன்றில் ஏற்றினர். இத்தகவல் அறிந்த வளர்மதி தம்பதியினர் குமரவேலுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவரும் அங்கு சென்று கடனை திருப்பி செலுத்தாமல் வீட்டை காலி செய்யக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார். இதில் இருதரப்புக்கும் வாய் தகராறு முற்றிய நிலையில், ரஞ்சித்தும், அவருடன் இருந்த நபர்களும் இரும்பு கம்பியால் தாக்கியதில் குமரவேல் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். இதையடுத்து, தாக்கிய நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். தகவல் அறிந்து வந்த போலீஸார்குமரவேலை மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து உடுமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான நபர்களை தேடி வருகின்றனர். இன்று பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.

இத்தகவல் அறிந்த இந்து முன்னணி மாவட்ட நிர்வாகி வீரப்பன் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் மருத்துவமனை முன்பு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x