Published : 23 May 2022 07:56 AM
Last Updated : 23 May 2022 07:56 AM

சென்னையில் மது விருந்து நிகழ்ச்சியில் நடனமாடிய மென் பொறியாளர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

சென்னை: சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு மது விருந்து நிகழ்ச்சி நடந்துள்ளது. செல்போன் செயலி மூலம் பதிவு செய்து, இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர் 900 பேர் இதில் கலந்து கொண்டனர். பிரேசிலைச் சேர்ந்த பிரசித்தி பெற்ற மந்த்ரா கோரா என்பவரின் ஆடல், பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நுழைவுக் கட்டணமாக ரூ.1,500 வசூலிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகத்தின் 4-வது மாடியில் நடைபெற்ற மது விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றோர் பல்வேறு வகையான மதுபானங்களைக் குடித்துவிட்டு, போதையில் உற்சாகமாக நடனமாடியுள்ளனர்.

இதில், சென்னை மடிப்பாக்கம் ஜோதி ராமலிங்கம் தெருவைச் சேர்ந்த பிரவீன்(23) என்பவர், தனது நண்பர்கள் நீக்கல், ஐஸ்வர் ஆகியோருடன் பங்கேற்றுள்ளார். மென் பொறியாளரான இவர், இசை-பாடலுக்கு தகுந்தவாறு ஆட்டம் போட்டுள்ளார். திடீரென அவர் மயங்கி விழுந்துள்ளார். அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அவர் அதிகம் மது அருந்தியிருந்ததால், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதையடுத்து, அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பிரவீன், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் ராஜேஷ்வரி, அண்ணா நகர் காவல் துணை ஆணையர் சிவ பிரசாத் மற்றும் திருமங்கலம் போலீஸார் சம்பந்தப்பட்ட வணிக வளாகத்துக்குச் சென்று, ஆய்வு மேற்கொண்டனர். மது விருந்து நிகழ்ச்சி உடனடியாக நிறுத்தப்பட்டு, அங்கிருந்த அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

பின்னர், அண்ணா நகர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் மஞ்சுளாவும் சம்பவ இடத்துக்குச் சென்று, அங்கிருந்த 844 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தார். மேலும், அனுமதி பெறாமல், சட்ட விரோதமாக மது விருந்து நடத்தியதாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், வணிக வளாகத்தின் 3-வது தளத்தில் உள்ள பாரை சோதனை செய்தபோது, அதுவும் உரிய அனுமதியில்லாமல் செயல்பட்டது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். சென்னையின் மையப் பகுதியில், முறையான அனுமதியின்றி மது விருந்து நடைபெற்றதும், அதில் பங்கேற்ற மென் பொறியாளர் உயிரிழந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு காவல் துறையின் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறும்போது, ``சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், உரிய அனுமதியின்றி மதுபானக் கூடங்கள் நடத்துவோர், கேளிக்கை நிகழ்ச்சிகள் மற்றும் மது விருந்து நிகழ்ச்சிகள் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார். மேலாளர் உட்பட 3 பேர் கைது மேலும், மது விருந்தின்போது, போதைப் பொருளையும் பயன்படுத்தினார்களா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வணிக வளாகத்தில் அனுமதியின்றி செயல்பட்ட பாருக்கு சீல்வைக்கப்பட்டுள்ளது. ஐ.டி. பணியாளர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஹோட்டல் மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x