

வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர், கோவையில் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தந்தை, மகனைப் பிடிக்க தனிப்படை போலீஸார் மும்பை விரைந்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் முஜாப்பூர் மாலிக் (24). இவர், கோவை பூ மார்க்கெட் அருகேயுள்ள தெப்பக்குளம் வீதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தார். இவருடன் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த மான்வா என்ற ஆனந்தகுமார் (27) வசித்து வந்தார். இருவரும், கோவையைச் சேர்ந்த நஜிபுல்சேட் (45) என்பவரிடம் பணியாற்றி வந்தனர்.
கடந்த 11 மாதங்களாக நஜிபுல் சேட், ஊழியர் முஜாப்பூர் மாலிக்குக்கு ஊதியம் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் முஜாப்பூர் மாலிக் சடலமாக அறையில் இருந்து மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டது, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீஸார் விசாரித்ததில், நஜிபுல்சேட் மற்றும் அவரது மகன் அனிஷேக் (18) ஆகியோர் முஜாப்பூர் மாலிக்கை அவரது வீட்டில் கடைசியாக சந்தித்ததும், ஊதிய நிலுவை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நஜிபுல்சேட், அனிஷேக் ஆகியோர் இணைந்து முஜாப்பூர் மாலிக்கை அடித்துக் கொலை செய்ததும் தெரியவந்தது.
தந்தை, மகன் இருவரும் மும்பைக்கு தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்ததால், அவர்களை பிடிக்க ஆர்.எஸ்.புரம் தனிப்படை போலீஸார் மும்பை விரைந்துள்ளனர்.