

தி.மலை அடுத்த நல்லான்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் வசிப்பவர் மணி. இவர், தனது குடும்பத்துடன் விவசாய நிலத்துக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். அப்போது அவர், தனது வீட்டை பூட்டிவிட்டு, அதன் சாவியை மறைவான இடத்தில் வைத்துள்ளார். பின்னர் அவர்கள் அனைவரும் நிலத்தில் இருந்து தனித்தனியே இரவு வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது வீட்டின் கதவு திறந்திருந்ததாக கூறப்படுகிறது. வீட்டுக்கு முன்னால் வந்தவர்கள் திறந்திருக்கலாம் என்ற அடிப்படையில், அவர்கள் இருந்ததாக தெரியவருகிறது.
இந்நிலையில், வீட்டில் உள்ள அறைக்கு மணியின் மகள் ஜெயந்தி நேற்று காலை சென்றுள்ளார். அப்போது பீரோவில் இருந்த ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்கள் கீழே கிடந்துள்ளன. மேலும், பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.4.80 லட்சம் பணத்தை காணவில்லை. வீட்டின் முன் கதவை பூட்டி, சாவியை வைத்துவிட்டு செல்வதை அறிந்த நபர்களின் கைவரிசையாக இருக்கக்கூடும் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இது குறித்து மணி கொடுத்த புகாரின் பேரில் கீழ்பென்னாத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.