வேலை வாங்கித் தருவதாக பலரிடம் மோசடி: கிறிஸ்தவ பெண் மத போதகர் மீது போலீஸார் வழக்குப் பதிவு

மரியா செல்வம்
மரியா செல்வம்
Updated on
1 min read

சென்னை: வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்ததாக கிறிஸ்தவ பெண் மத போதகர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் காட்ப்ரே நோபுள். பேராயரான இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த மரியாசிஸ்டர் என்பவர், என் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். நீங்களும் பேராயர், நானும் மத போதகர். உங்கள் மூத்த மகனுக்கு, கிரீஸ் நாட்டில் வேலை வாங்கி தருகிறேன் என கூறினார்.

இதைத் தொடர்ந்து வங்கி கணக்கு வாயிலாகவும், பெரியமேடு பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியிலும், ரூ.8.50 லட்சம் வாங்கினார். ‘விசா’ வரவில்லை. இதனால், இவர் தெரிவித்த நிறுவன நிர்வாகிகளை தொடர்பு கொண்டபோது, மரியாசிஸ்டர் எங்களிடம் வழங்கிய பணியாணை போலி என தெரியவந்தது. பணத்தை திரும்ப கேட்டபோது, கொலை மிரட்டல் விடுக்கிறார் என அதில் குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்த போலீஸாருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி, பெரியமேடு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், மரியா சிஸ்டர் என்பவரின் பெயர் மரியா செல்வம் (42) என்பதும், இவர், இலங்கையைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மத போதகராக செயல்பட்டு, தேவாலயங்களுக்கு வருவோருக்கு வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக மோசடிசெய்வதையே தொழிலாக செய்துவந்ததும் தெரியவந்துள்ளது. இவர்மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகிறோம் என போலீஸார் தெரிவித்தனர்.

புகாருக்கு உள்ளான மரியாசெல்வத்தால், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் ரூ.18.5 லட்சம் இழந்ததாகவும், இதனால் அவர் அங்குள்ள ஆட்சியர் அலுவலகத்தில் 2019-ம் ஆண்டு தீக்குளித்து இறந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீஸார் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in