

கூடலூர்: தேனி மாவட்டம், கூடலூர் அருகே குள்ளப்ப கவுண்டன்பட்டி சாலையில் கடந்த திங்கட்கிழமை 50 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதித்த பெண் இறந்து கிடந்தார்.
தலை மற்றும் உடலில் காயங்கள் இருந்ததால் கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து உத்தமபாளையம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயாகுப்தா தலைமையில், ஆய்வாளர் பிச்சைப்பாண்டி, சார்பு ஆய்வாளர்கள் முனியாண்டி, மணிகண்டன், ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
கொலை நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதனடிப்படையில் கூடலூரைச் சேர்ந்த முருகன் மகன் அரவிந்த்குமார் (25) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுவனையும் பிடித்து விசாரித்தனர்.
இதில் இருவரும் ஒன்றாக கட்டிட வேலைக்குச் செல்வதும், பின்னர் மது அருந்தும் பழக்கம் இருந்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் இருவரும் மதுபோதையில் மன நலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அவர் கூச்சலிட்டதால் அவரை கம்பால் கடுமையாகத் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் விரைவாக குற்றவாளிகளை பிடித்த தனிப்படை போலீஸாரை, தேனி எஸ்பி பிரவின் உமேஷ் டோங்கரே பாராட்டினர்.