

கோவை: திருச்சியை சேர்ந்தவர் கே.என். ராமஜெயம். இவர், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ஆவார். தொழில் அதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைப்பயிற்சிக்கு செல்லும் போது, கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக முதலில் திருச்சி போலீஸார் விசாரித்தனர். பின்னர், வேறு சில விசாரணைப் பிரிவுகளுக்கும் வழக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால், குற்றவாளி குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்தச் சூழலில், ராமஜெயம் கொலை வழக்கு குறித்த விசாரணை சிபிசிஐடி போலீஸார் வசம் சென்றது. சிபிசிஐடி போலீஸார் இவ்வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சூழலில், ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க, சுவரொட்டிகள் ஒட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர். அதன்படி, கோவையிலும் காந்திபுரம், பீளமேடு உள்ளிட்ட பல்வேறு பொது இடங்களிலும், காவல்நிலையங்களின் அறிவிப்புப் பலகையிலும் போலீஸார் சுவரொட்டி ஒட்டி விசாரித்து வருகின்றனர்.
அந்த சுவரொட்டியில் ராமஜெயத்தின் புகைப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை அறிவிப்பு, திருச்சி பிரபல தொழிலதிபர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டது குறித்து குற்றவாளிகளை பற்றி சரியான தகவல் அளிப்பவருக்கு ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் . திருச்சி, சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவு, தொடர்பு கொள்ள வேண்டிய எண், மெயில் முகவரி ஆகியவை அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.