

நாமக்கல்: ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை ஒன்றியம் நாரைக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (46). இவர் ஆழ்துளை கிணறு அமைக்கும் லாரியில் டிரில்லராக வேலை செய்து வருகிறார். இவருக்கு மேகலா (38) என்ற மனைவி, மகள் நர்மதா (19), மகன் தருண் (17) ஆகியோர் உள்ளனர். தருண் பிளஸ் 2 படித்து வந்தார்.
ரவி, மேகலா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டுக்கு முன்னர் பிரிந்தனர். பெற்றோரை சேர்த்து வைக்கும் முயற்சியில் தருண் ஈடுபட்டார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை மேலப்பாளையம் அருகில் உள்ள செங்கோட்டை காடு எனும் இடத்தில் தருண் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்து சென்ற பேளுக்குறிச்சி போலீஸார் பிரேதத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோரை சேர்த்து வைக்க முடியாமல் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.