

சென்னை: ரூ.25 கோடி மதிப்புள்ள தொன்மையான பச்சைக்கல் லிங்கத்தை விற்க முயன்ற இருவரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை பூந்தமல்லி அருகேதொன்மையான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைக்கல்லிங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி உத்தரவிட்டார்.
இதையடுத்து, அப்பிரிவின் ஐஜிதினகரன் வழிகாட்டுதல்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார்சிலைகளை வாங்கும் வியாபாரிகள்போல தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு சிலை கடத்தல்காரர்களிடம் பேரம் பேசினர். அப்போது, சிலையின் விலை ரூ.25 கோடி என கடத்தல்காரர்கள் தெரிவித்தனர். சிலையை காட்டியவுடன் அவர்களை போலீஸார் சுற்றிவளைத்தனர்.
கடத்தல்காரர்களான சென்னை வெள்ளவேடு புதுக்காலனியைச் சேர்ந்த் பக்தவச்சலம் என்ற பாலா (46), புதுச்சத்திரம் கூடப்பாக்கம் கலெக்டர் நகரை சேர்ந்த பாக்கியராஜ் (42) ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்த தொன்மையான பச்சைக்கல் லிங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சிலை கடத்தல்தடுப்புப் பிரிவு போலீஸார் கூறும்போது, “கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பச்சைக்கல் லிங்கம், 9 கிலோ 800 கிராம் எடையும், 7 செ.மீ. உயரமும், 18 செ.மீ. சுற்றளவும் கொண்டதாக உள்ளது. இந்த சிலை 500 ஆண்டுகள் தொன்மையானது. லிங்கத்தின் கீழே சிவபெருமானின் ஐந்து முகங்கள் ஆயுதங்களுடன் பொறிக்கப்பட்டுள்ளன” என்றனர்.
இதற்கிடையில், சிலை பறிமுதல் வழக்கில் கைது செய்யப்பட்ட பக்தவச்சலம் (எ) பாலா, பாக்கியராஜ் ஆகியோர் நேற்று கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 30-ம்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி சண்முகப்பிரியா உத்தரவிட்டார்.
இதையடுத்து, இருவரும் திருச்சி மத்திய சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட சிலை கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் இன்று வைக்கப்படுகிறது.