

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பூட்டியிருந்த வீட்டில் திருட முயன்றபோது அதன் உரிமையாளர் அமெரிக்காவில் இருந்து எச்சரிக்கை அலாரத்தை ஒலிக்கச் செய்ததால் திருட வந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
திண்டுக்கல் எம்.வி.எம். நகரில் வசிப்பவர் வழக்கறிஞர் லீனஸ். இவர் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளார்.
இதனால் இவரது வீட்டின் முன், ‘வீட்டில் பாதுகாப்பு அலாரம் பொருத்தப்பட்டுள்ளது, வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் இல்லை’ எனத் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் எழுதி வைத்துள்ளார்.
இந்த எச்சரிக்கையையும் மீறி, இவரது வீட்டில் நேற்று அதிகாலை சில மர்ம நபர்கள் நுழைந்தனர். அவர்கள் வீட்டின் பூட்டை உடைக்க முயன்றபோது அமெரிக்காவில் உள்ள லீனஸ் மொபைல் போனுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வந்தது.
இதையடுத்து, அங்கிருந்தே வீட்டின் எச்சரிக்கை அலாரத்தை ஒலிக்கச்செய்தார். இதனால் திருடர்கள் பயந்து ஓடினர்.
வீட்டில் இருந்த சிசிடிவியில் திருட வந்தவர்களின் படங்கள் பதிவாகி உள்ளன. இதைக் கொண்டு, திண்டுக்கல் மேற்கு போலீஸார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.