சாலையில் பெண் வழக்கறிஞரை கடுமையாக தாக்கியவர் கைது

சாலையில் பெண் வழக்கறிஞரை கடுமையாக தாக்கியவர் கைது
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பாகல் கோட்டை மாவட்டத்தில் உள்ள விநாயக் நகரை சேர்ந்தவர் சங்கீதா சிக்கேரி (37). பெண் வழக்கறிஞரான இவருக்கும் அவரது உறவினரான மஹந்தேஷ் சோலாசகுட்டாவுக்கும் வீடு விற்பது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

கடந்த சனிக்கிழமை பாகல்கோட்டை மார்க்கெட் பகுதியில் சங்கீதாவுக்கும் மஹந்தேஷுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த மஹந்தேஷ் சங்கீதாவை சரமாரியாக தாக்கினார். அதை பார்த்தும் பொதுமக்கள் யாரும் உதவிக்கு வரவில்லை. அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை கண்டித்துள்ள‌ பயோகான் நிறுவன‌ தலைவர் கிரண் மஜும்தர் ஷா, ‘‘சம்பந்தப்பட்ட நபர் மீது கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’' என்று கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையம், கர்நாடக போலீஸார் 7 நாட்களுக்குள் வழக்கு பதிவுசெய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என நேற்று உத்தரவிட்டது.

வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மஹந்தேஷை கைது செய்ய கோரி போராட்டம் நடத்தினர். இதையடுத்து பாகல்கோட்டை போலீஸார் மஹந்தேஷ் மீது வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.

போலீஸார் கூறும்போது, ‘‘மஹந்தேஷ் பாகல்கோட்டை பல்கலைக்கழகத்தில் புகைப்படக்காரராக பணியாற்றுகிறார். இருவருக்கும் இடையே இருந்த முன் பகையின் காரணமாக பெண் வழக்கறிஞரை தாக்கியுள்ளார்'' என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in