காவேரிப்பட்டணம் அருகே 10-ம் வகுப்பு மாணவர்களுக்குள் தகராறு: கத்தியால் குத்திய சக மாணவர் கைது

காவேரிப்பட்டணம் அருகே 10-ம் வகுப்பு மாணவர்களுக்குள் தகராறு: கத்தியால் குத்திய சக மாணவர் கைது
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 10-ம் வகுப்பு மாணவரை கத்தியால் குத்திய சக மாணவரை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கடந்த 13-ம் தேதி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த சிறப்பு வகுப்பில், 2 மாணவர்களுக்கு இடையே மாம்பழம் சாப்பிடுவதில் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் நடந்த சிறப்பு வகுப்புக்கு, தகராறில் ஈடுபட்ட ஒரு மாணவர் வரவில்லை. இதையடுத்து மற்றொரு மாணவர், வாட்ஸ் அப் மூலம் பள்ளிக்கு வராத மாணவருக்கு மிரட்டல் விடுத்தார். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த மாணவரிடம், சக மாணவர் தகராறில் ஈடுபட்டு தான் வைத்திருந்த கத்தியால் மாணவரின் முதுகில் குத்தினார். இதில் படுகாயமடைந்த மாணவரை ஆசிரியர்கள் மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, கத்தியால் குத்திய மாணவரை கைது செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சிஇஓ மகேஸ்வரி கூறும்போது, 10-ம் வகுப்பு மாணவர், சக மாணவரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரோனா காலக்கட்டத்தில் பள்ளிகளுக்கு வந்து பாடம் கற்காததால், மாணவர்களிடையே ஒழுக்க நெறிகள் குறைந்து இருப்பது வேதனை அளிக்கிறது என்றார்.

காவேரிப்பட்டணம் காவல் ஆய்வாளர் முரளி கூறும் போது, கத்தியால் குத்திய மாணவர் மீது, கொலை முயற்சி, மிரட்டல் விடுத்தது, ஒழுங்கீனமாக நடந்தது ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளோம். மாணவர் மீது என்ன நடவடிக்கை என்பது பின்னர் தெரியவரும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in