Published : 17 May 2022 07:31 AM
Last Updated : 17 May 2022 07:31 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது கொண்டக்கரை ஊராட்சி மன்றம். இதன் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த மனோகரன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். இவருக்கு மனைவி சர்மிளா, மகள் ரக்ஷிதா, மகன் ரக்சன் உள்ளனர்.
இந்நிலையில், மனோகரன் குருவிமேடு கிராமத்தில் உள்ள தனது கட்சி நிர்வாகியின் இல்லத்திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் சென்றார். பின்னர், இரவு காரில் வீடு திரும்பினார்.
குருவிமேடு சாலை திருப்பத்தில் வந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரி காரின் பக்கவாட்டில் வேகமாக மோதியது.
கார் நிலைத் தடுமாறி நின்றது. உடனே, மனோகரன் காரில் இருந்து இறங்கினார். அப்போது, டிப்பர் லாரியில் இருந்து 10 பேர் கொண்ட கும்பல் மனோகரனை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியது. பின்னர், அக்கும்பல் லாரியில் ஏறி தப்பி ஓடியது.
தங்கள் கண்ணெதிரே மனோகரன் வெட்டப்பட்டதைக் கண்டு அவரது மனைவி, பிள்ளைகள் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும், அவர்கள் அலறி அழுதனர். உடனே அங்கு திரண்டு வந்த குருவிமேடு கிராம மக்கள் மனோகரனை மீட்டு விம்கோ நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே மனோகரன் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மீஞ்சூர் போலீஸார் இறந்த மனோகரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, மனோகரன் வெட்டிக் கொல்லப்பட்டதகவல் அறிந்த கொண்டக்கரை ஊராட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைஏற்று சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
கேமரா பதிவுகள் ஆய்வு
மேலும், இக்கொலை தொடர்பாக மீஞ்சூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலை நடந்த இடத்தில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
மேலும், ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், குற்றவாளிகளைப் பிடிக்க, உதவி ஆணையர் முருகேசன் தலைமையில் ஆய்வாளர்கள் எண்ணூர் பரந்தாமன், ஆவடி சத்தியமூர்த்தி, மீஞ்சூர் பன்னீர்செல்வம், மணலி தட்சிணாமூர்த்தி ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT