Published : 17 May 2022 06:10 AM
Last Updated : 17 May 2022 06:10 AM

அரசுப் பேருந்தில் நடத்துநரை சரமாரியாக தாக்கிய 3 பேர் கைது: விருத்தாசலம் அருகே பாமக கவுன்சிலர் உட்பட 2 பேருக்கு வலை வீச்சு

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக விருத்தாசலம் நகர்மன்ற பாமக உறுப்பினர் உட்பட இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை சிதம்பரம் நோக்கி அரசுப் பேருந்து புறப்பட்டுள்ளது.

பேருந்தின் நடத்துநர் மணிகண் ணன், பெண் பயணியிடம் பயணச்சீட்டுக் கொடுக்கும்போது சில்லரை தவறி கீழே விழுந்துள்ளது. இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அந்தப் பெண் செல்போன் மூலம் யாரிடமோ தகவல் கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து ஆட்டோவில் வந்த சிலர், ஸ்டேட் பேங்க் பேருந்து நிறுத்தத்தில் வழிமறித்து, பேருந்தினுள் ஏறினர்.

நடத்துநரை தாக்கி கீழே இறக்கியுள்ளனர். அப்போது பேருந்தில் ஏறுவதற்காக காத்தி ருந்த நடத்துநரின் தாயார், மகனை சிலர் தாக்குவதை அறிந்து கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆட்டோவில் வந்த கும்பல் நடத்துநரை ஆட்டோவில் ஏற்றி, வேறொரு இடத்திற்கு அழைத்து சென்று அங்கு வைத்து அவரை தாக்கியுள்ளனர். பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். அவர் மதுபோதையில் பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, தொமுச போக்குவரத்து தொழிற் சங்கத் தலைவர் தங்க. ஆனந்தன் அங்கு வந்தள்ளார். அவர் போலீஸாரிடம், “பணியில் இருந்த நடத்துநரை தாக்கியுள்ளனர். அதோடு அவரை களங்கப்படுத்தும் வகையில் அவர் மீது மதுவை ஊற்றி, மது போதையில் இருந்ததைப் போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். உடனடியாக மணிக்கண்ணனை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும். தாக்கிய வர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் ”என கோரிக்கை வைத்துள்ளார்.

இதையடுத்து நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் மணிகண்ணன் மது அருந்தவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து நடத்துநர் மணிகண்ணனை தாக்கியதாக, பாமக நகர்மன்ற உறுப்பினர் சிங்காரவேல், அசோக்குமார், கோவிந்தன், மோகன்ராஜ் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் மீது விருத்தாலசம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக அசோக்குமார், கோவிந்தன், மோகன்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான சிங்காரவேல் மற்றும் வெங்கடேசன் ஆகியோரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இதனிடையே விருத்தாசலம் பணிமனை 2-ன் பாமக தொழிற் சங்கத் தலைவர் ராமநாதன் கூறுகையில், "போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளரை தாக்கியவர்களை கைது செய்து, வழக்கை சரியான முறையில் கையாண்டு, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்தால் தான், வரும் காலங்களில் போக்குவரத்து தொழிலாளர்கள் அச்சமின்றி பணியில் ஈடுபட முடியும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x